Ad Widget

மணிக்கூட்டு வீதி கட்டுடைப்பு தொடர்பில் பொலிஸ் விசாரணை

யாழ்ப்பாணம், மணிக்கூட்டு வீதியின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்காரக் கட்டுக்களை உடைத்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.

மணிக்கூட்டு கோபுர வீதியின் அழகுக்காக வீதியின் நடுவில் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களும் பூந்தொட்டிகளும் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையால் நிர்மாணக்கப்பட்டு மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன.

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி இரவு அப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்துக்கு முன்பாகவுள்ள 20 மீற்றர் வரையான அலங்காரக் கட்டுக்கள் இனந்தெரியாதவர்களால் கனரக வாகனம் (பெக்கோ) கொண்டு உடைக்கப்பட்டன. தொடர்ந்து, மிகுதி கட்டுக்களும் உடைக்கப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தோம் என்று தெரிவித்த மாநகர ஆணையாளர், அவற்றை யார் இடித்தார்கள் என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இந்தக் கட்டுக்களை கட்டும் போது பலதரப்பினரிடமிருந்து எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன என்றும் கூறினார்.

Related Posts