Ad Widget

மணல் கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மணற்கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (07), இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த எம்.அச்சல (வயது 32) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துன்னாலை, குடவத்தையைச் சேர்ந்த தயவுலிங்கம் தர்சன் (வயது 27) என்ற நபரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் பிரிவு 2க்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.

மணற்கொள்ளையில் 12பேர் கொண்ட கும்பல் ஈடுபடுகின்றனர் என பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிவில் உடையில் அங்கு சென்ற பொலிஸார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைய மிகுதிப் பேர் தப்பி ஓடியுள்ளனர். மிகுதிப் பேரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஜவ்பர் தெரிவித்தார்.

Related Posts