Ad Widget

மட்டு.மாவட்டத்தில் 2,218 சிங்களவர் குடியேற்றம்!- சுவாமிநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 சிங்களவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இவர்களுக்கு பாகுபாடின்றி அரச சேவை வழங்கப்படுகின்றது என்றும் கூறிய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த சனத்தொகை 5 இலட்சத்து 82 ஆயிரத்து 323 ஆகும். இதில் 3 ஆயிரத்து 306 பேர் சிங்களவர்கள். இதில் 961 குடும்பங்களைச் சேர்ந்த 3,288 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பாகுபாடின்றி அரச சேவை வழங்கப்படுகிறது. சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போரால் ஏற்பட்ட வீடிழப்புகள் தரவு சேகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரதேச செயலக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தரவு பேணப்படுகிறது.

சுயவிருப்பின்பேரில் மீள்குடியேற வந்த இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்கள் அவர்களின் நிரந்தர இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்த பாகுபாடுமின்றி அடிப்படை வசதிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் காணி ஆணையாளரால் 15.11.2013 அன்று பத்திரிகை விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், சுயவிருப்பு மீள்குடியேற்றம் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு அரச கொள்கைக்கு அமைய மீள்குடியேற்றக் கொடுப்பனவு மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன” – என்றார்.

இதேவேளை, புத்திக பத்திரண எம்.பியி கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அங்குள்ள தேரருடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

Related Posts