Ad Widget

இளைஞரை கடத்திய ‘ஆவா’ குழுவைச் சேர்ந்த மூவருக்கு விளக்கமறியல்

தென்மராட்சி – மட்டுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதே தினத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் நேற்றய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த வாரம் மட்டுவில் வடக்கிலுள்ள வீடொன்றினுள் ஐந்து மோட்டார்ச் சைக்கிள்களில் இரவு புகுந்த 15 பேரடங்கிய குழுவினர் குறித்த இளைஞனை கத்திமுனையில் கடத்திச் சென்று கைதடியிலுள்ள இரகசிய இடத்தில் வைத்து அச்சுறுத்திய பின்னர் விடுவித்திருந்தனர்.

இதனையடுத்து இளைஞரின் குடுப்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து இணுவில், மாவிட்டபுரம், மல்லாகம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவரைச் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடத்தப்பட்ட இளைஞரின் சகோதரி லண்டனில் வசித்துவருகிறார். அவரை லண்டனில் வசித்துவரும் ஒர் இளைஞர் ஒரு தலையாகக் காதலித்து வருகிறார். தன்னைக் குறித்த யுவதி காதலிக்காததால் அவரது சகோதரனை அச்சுறுத்தி காதலிக்க வைக்குமாறு ஆவா குழுவினருக்கு பணம் வழங்கியுள்ளார்.

இந்தப் பின்னணியிலேயே இளைஞர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

Related Posts