Ad Widget

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்த காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றது.

மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்குள், நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த பக்தர்கள் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மடு பிரதேசத்தில் இராணுவம், விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின் போது மடு தேவாலயமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பகுதியில் தஞ்சமடைந்த பலர் உயிரிழந்தனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

இறுதி நேரம் வரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அபயமளித்து அடைக்கலம் வழங்கிய மடு அன்னையும் தீவிரமடைந்த யுத்த மோதல்கள் காரணமாக பாதுகாப்புக்காக இடம்பெயர நேர்ந்தது.

இதன்போது பாதுகாப்பிற்காக மடு அன்னையின் சொரூபத்தை வடமேற்குக் கரையோரக் கிராமமாக்கிய தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்ல நேர்ந்தது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடு ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு, மடு மாதா ஆலயம் சிறப்புற செயற்படத் தொடங்கியது.

யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மற்றும் இந்து சமய மக்களும் மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவின்போது 9 நாட்களும் ஆலயத்தில் கூடித் தங்கியிருப்பார்கள்.

இந்த காலப்பகுதியில் பாம்பு போன்ற விஷம் தோய்ந்த உயிரினங்களினாலோ அல்லது வன விலங்குகளினாலோ பக்தர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதில்லை என்பது அன்னையின் அருளுக்கு அடையாளமாகக் கருதப்படுகின்றது’ என குறிப்பிட்டார்.

Related Posts