Ad Widget

மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழ் அரசியல் சரித்திரத்தில் ஒரு அத்தியாயத்தின் முடிவு!

மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளரும் தமிழ் அரசியலில் மங்கையரின் பங்கை மாண்புறச் செய்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் என வடமாகாண் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1954ம் ஆண்டு இளம் அரசியல்வாதியாக இருந்த அட்வகேட் அமிர்தலிங்கம் அவர்களை கைப்பிடித்த காலம் தொட்டு அவர்தம் கணவரின் அரசியலில் இரண்டறக் கலந்த ஒரு பெருந்தகையாக இருந்தவர். 1961ம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கணவருடன் முன்நின்று பங்கு பற்றியமைக்காக கைது செய்யப்பட்டு 6மாத காலம் பணாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்.

அன்னாரின் கருத்தாளம் மிக்க பேச்சுக்களும் கனிவான குரலில் பாடுகின்ற பாட்டுக்களும் தமிழ் மக்கள் மத்தியிலே இன உணர்வையும் அரசியல் விழிப்புணர்வையும் பிரகாசிக்கச் செய்வதற்கு பெரிதும் உதவின.

கணவரின் அரசியல் நடவடிக்கைக்கு என்றும் துணைபோகின்ற ஒரு துணைவியாக உயர்விலும் தாழ்விலும் அவருடன் வாழ்ந்த ஒரு சிறந்த பெண்மணி. கணவரின் திடீர் இறப்பிற்கு பின்பும் அந்த இறப்பிற்கு காரணமாக இருந்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியவரல்ல.

கணவரது இறப்பிற்கு பின்பு இந்த நாட்டைவிட்டுச் சென்றிருந்தாலும் அவருடைய எண்ணங்கள் நாட்டினதும் தமிழ் மக்களினதும் மேன்மையை நோக்கியதாகவே இருந்தன.

அன்னாரின் மறைவு தமிழ் அரசியல் சரித்திரத்தில் ஒரு அத்தியாயத்தின் முடிவாகும்.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

Related Posts