Ad Widget

மக்கள் ஆதரவளிக்காவிடின் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார அமைச்சர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், அதனை தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் எனவும் சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கோவிட்-19 நோய்க்கு எதிராக அரசு இவ்வளவு உயர்ந்த நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நேற்று (10) கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் விக்கிரமராட்சி கண் மருத்துவ நிறுவனத்துடன் இணைந்த ZEISS VISION CENTER ஐ திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்ததாவது;

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

மக்கள் எதிர்மறையான அணுகுமுறையைக் காட்டினால், பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் சந்திக்க நேரிடும்.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மக்களின் அதிக பங்களிப்பு காரணமாக இந்த துரதிஷ்டமான நிலமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கோவிட்-19 நோய் பரவல் சிறந்த நிலையில் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதுவரை வெற்றிகரமாக கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும்.

கோவிட்-19 பேரழிவு உலகிற்கு ஒரு புதிய சூழ்நிலை. அதைச் சமாளிப்பதற்கான வழியை மக்கள் உருவாக்க வேண்டும்.

கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும்.

தொற்றுநோய் மிக நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், பொருளாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதில் பலர் பாதிக்கப்பட வேண்டியிருக்கும்.

அத்தகைய சூழ்நிலைக்கு வராமல் இருப்பதற்கான பொறுப்பு மக்களின் செயல்களை அடிப்படையாகக் கொண்டது.

எதிர்காலத்தில் நிலமை குறித்து முழுமையான முடிவுகளை எடுக்க முடியாது. ஆனால் தொற்றுநோய் தொடர்பில் அவதானமாக இருப்பது நல்ல விடயம்.

நாட்டில் தடுப்பூசிகள் வழங்கும் பணி சில நாடுகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

Related Posts