Ad Widget

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் டக்ளஸ் வேண்டுகோள்

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும், கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களை அணிதிரட்டி போராடுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுச் சபைக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (08.06.2016) நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கட்சிக்குள்ளேயும், வெளியேயும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் பணிகள் தொடர்பான விமர்சனம் மற்றும் சுய விமர்சனங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் புதிய தேர்தல் முறைமை தொடர்பாகவும், தேசியக் கட்சிகளுடனான கூட்டு மற்றும் பிராந்தியக் கட்சிகளுடனான கூட்டுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் முரண்பாடுகளைக் கடந்து, உடன்பாடுகளுடன் இணங்கிச் செயற்படக்கூடிய தமிழ் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் செயற்படுவது தொடர்பாகவும், கட்சி புதிய சிந்தனையை வளர்க்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழலில் நாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகவே எமது மக்களின் கோரிக்கைகளுக்கும், தேவைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க மக்களை அணி திரட்டி தோழர்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும். புதிய அரசாங்கத்தில் பதவிகளை எடுத்துக்கொண்டு இணக்க அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த யதார்த்தத்தை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும் என்றும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நேற்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து கட்சியின் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், கட்சியின் அபிமானிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். விசேடமாக, சுவிற்ஸ்சர்லாந்து, கனடா, ஜேர்மனி ஆகிய புலம்பெயர் நாடுகளிலிருந்தும் கட்சியின் சர்வதேச அமைப்பாளர், சர்வதேச பிரதி அமைப்பாளர் மற்றும், வெளிநாடுகளின் அமைப்பாளர்களும், கட்சியின் பிரதிநிதிகளும் ஸ்கைப் மூலமாக கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts