Ad Widget

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எத்தகைய கருத்தியல்களை அல்லது தொலைநோக்கைக் கொண்டிருந்த போதும், ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு தாமரைத்தடாக மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற ரய்கம் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி விருதுகள் 2014 ஆம் ஆண்டில் இலங்கை தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பான சிறந்த தொலைக்காட்சி நாடகங்கள், நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்பட்டது. சமூகத்தில் சுதந்திரத்தையும் உரிமைகளையும் தாபிக்க வேண்டியது அரசாங்கத்தின் ஒரு பொறுப்பு என்ற வகையில் அரசாங்க ஊடகங்கள் அரசியல் சார்பற்றவையாக இருக்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். சமூகத்திற்கு தேவையான அறிவு, ஞானத்தை ஒரு நிறுவனத்தில் சுதந்திரமாக பணியாற்றுவதன் ஊடகவே அடைந்துகொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

ஒரு தனியார் நிறுவனம் என்ற வகையில் கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக ‘கிங்டம் ஒஃப் ரைகம்’ நிறுவனத்தின் முன்னெடுப்புகளை ஜனாதிபதி பாராட்டினார். தொழில் முயற்சியாளர்களது முன்னேற்றத்திற்காக உதவ வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் தனது கொள்கையினூடாக உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தார்.

சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஆகியவற்றிற்கான விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts