Ad Widget

மக்களுக்கு பாதிப்பின்றி போர் புரிந்தோம் – பொன்சேகா

யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

sarathfonseka

யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற, பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘இந்த அரசாங்கம் நிராயுதபாணிகளை ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்துகின்றது. நாங்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை நடத்தும்போது, பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறைகளில் அடைக்கின்றனர். என்னையும் அவ்வாறே சிறையில் அடைத்தார்கள். ஆனால் நான் சிறைச்சாலை உணவின் மூலம் சக்தியை பெற்றுக்கொண்டேன்.

அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பது மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இல்லை. அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு 1 கிலோ மீற்றருக்கு 5 இலட்சம் ரூபாய் தரகு பணமும் (கொமிஷன்) புகையிரத பாதைகள் அமைப்பதற்கு 1 கிலோ மீற்றருக்கு 280 இலட்சம் ரூபாய் தரகு பணமும் (கொமிஷன்) வாங்கினார்கள்.

நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, வீடு என்பவற்றையே கேட்கின்றார்கள். அவற்றையே நாம் இந்த மக்களுக்கு வழங்கவுள்ளோம். இனவாதம், மதவாதம் பேசி மக்களை வெறுப்படைய வைக்காது, நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது அரசாங்கம் மீது நம்பிக்கைக்குரியவர்கள் ஆக்குவோம். நீதியான ஜனநாயகமான நாட்டை உருவாக்குவோம் எனக் கூறினார்.

‘யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமலேயே நாங்கள் யுத்தம் புரிந்தோம்’ என பொன்சேகா கூறிய போது, பொதுமக்கள் கூட்டத்திலிருந்து பொய் சொல்லவேண்டாம் என்று பல குரல்கள் ஒலித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts