Ad Widget

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை – டக்ளஸ்

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மாவிட்டபுரம் கிராமத்தில் தேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்டத்தை மாவட்ட மட்டத்தில் ஆரம்பித்து வைத்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இம்மரநடுகை திட்டம்; இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தவகையில், எமது மாவட்டத்தையும் எவ்விதமான பாரபட்சமுமின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மரங்களை பாதுகாப்பது பராமரிப்பது மட்டுமன்றி எமது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.

எமது மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானவை என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்தவகையில், மக்களின் நிலங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதே எமது தலையாய கடமையுமாகவுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வரும் அதேவேளை, நேற்றைய தினமும் கொழும்பில் இதுவிடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நடைமுறைசாத்தியான வழிமுறையில் மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதுடன் வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் உரிய வகையில் தீர்வு காண்போம்.

அதனடிப்படையில் விசேட நிதியினை பெற்று அதனூடாக மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுக்க தயாராகவுள்ள நிலையில் கிடைக்கின்ற வாய்ப்புகளை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி மேலும் முன்னேற்றம் காண வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

Related Posts