Ad Widget

மக்களின் தேவைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும்: டக்ளஸ்

மக்களின் தேவைகள் இனம்காணப்படுவது மட்டுமன்றி, அவற்றுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே மக்களுக்கான சேவைகளை முழுமைப்படுத்த முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

la3

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டுப் பகுதி மக்களுடன் நேற்றய தினம் (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுனாமியாலும், யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சுயபொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் அரசினதும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் மீள்குடியேற்றம், வாழ்வாதார உதவித் திட்டம், சுயதொழில் வாய்ப்பு உள்ளடங்கலான பல்வேறு செயற்றிட்டங்கள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கட்டைக்காடு ஜே – 433 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் வாழ்ந்து வரும் ஒருதொகுதி மக்கள், நிரந்தரக் காணிகள் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதை நான் நன்கறிவேன்.

அந்தவகையில் நீங்கள் எதிர்நோக்கி வரும் இக்காணிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், கொழும்பிலுள்ள காரியாலயத்துடனும் துறைசார்ந்த அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இம்மாத இறுதிக்குள் உரிய தீர்வு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி, நீங்கள் வாழும் பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தறிந்து, குறித்த பிரச்சினை சாதகமாக பரிசீலித்து இறுதி தீர்வொன்றை எட்டுவதற்கு தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் வடமாகாண காணி ஆணையாளர் தயானந்தன், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts