Ad Widget

மக்களின் ஆணைக்கேற்ப செயற்பட தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் வவுனியா ‘வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை நடைபெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் நிறைவில் மேற்படிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு:-

“இன்று (நேற்று) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் மட்டும் எங்களுடைய நிகழ்ச்சி நிரலிலே சேர்க்கப்பட்டு அவை தொடர்பாக ஆராயப்பட்டன. புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்குவதற்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே இந்த புதிய அரசமைப்பு உருவாக்குதல் சம்பந்தமாக எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு, அதிலே நாங்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் இன்று பேசப்பட்டன.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த புதிய அரசமைப்புச் சட்டத்திலே கொண்டுவரப்படுகின்றபோது தமிழ் மக்களுடைய ஆணையை சுமந்து நிற்கின்ற கூட்டமைப்பு அந்தத் தேர்தல் அறிக்கையிலே நாங்கள் சொல்லியிருக்கின்ற அடிப்படையான விடயங்களை – புதிய அரசமைப்புச் சட்டத்திற்குள்ளே கொண்டு வருவதற்கான எங்களுடைய முயற்சிகளிலே நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம் என்ற தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் எடுத்திருக்கின்றோம்.

அத்தோடு எங்களுடைய மக்களுடைய உடனடிப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற விடயங்களிலே எங்களுடைய பங்களிப்பு செலுத்தப்படவேண்டும். இந்த வருடத்திலே முக்கிய விடயமாக அரசமைப்பு விடயம் இருந்தாலும் எங்களுடைய மக்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற பல விடயங்கள் சம்பந்தமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் இயங்குவோம்; அதற்கான பரிகாரங்களையும் தேடுவோம் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம்.

விசேடமாக எங்களுடைய மக்களுடைய காணிகள் பல இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சில சில இடங்களிலே சில் பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டாலும் முழுமையாக அந்த இடங்கள் விடுவிக்கப்பட்வில்லை. அதிலே இராணுவப் பிரசன்னம் இருப்பது மிகவும் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகின்றது. ஆகவே, தொடர்ச்சியாக அரசுடன் நாங்கள் பேசி வருகின்றோம். தொடர்ச்சியாக சிறு சிறு பகுதிகள் விடுவிக்கப்படுகின்ற முறைமை இருந்து வருகின்றது. அது துரிதப்படுத்தப்படவேண்டும். அனைத்துப் பிரதேசங்களும் விடுவிக்கப்படவேண்டும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை தொடர்ந்தும் நாங்கள் அரசுக்கு அழுத்தமாகக் கூறி வருகின்றோம்.

அரசியல் கைதிகளுடைய விடுதலை குறித்து அரசால் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. உங்களுக்குத் தெரியும். இந்த வாக்குறுதிகள் முழுதாக நிறைவேற்றப்படவில்லை. ஆகையினாலே சில நாட்களில் அரசுடன் நாங்கள் அது குறித்துப் பேச்சு நடத்தி வெகு விரைவிலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற – விசேடமாக நீண்ட காலமாக சிறையிலே இருக்கின்ற எங்களுடைய இளைஞர்களின் விடுவிப்பு சம்பந்தமாகவும், காணாமல் போகச் செய்யப்பட்டோரின் விடயம் சம்பந்தமாகவும் விசேடமாக நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம்.

அது குறித்த ஒரு அலுவலகம் திறக்கப்படும். அது குறித்து உடனடியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தபோதிலும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகையாலே இது குறித்த பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கே இருக்கின்றது. அதை வருகின்ற மாதம் நாடாளுமன்றத்திலே ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையாக நாங்கள் முன்னெடுத்து அரசுனுடைய பதிலை கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம்” – என்றார்.

Related Posts