Ad Widget

மக்களிடமிருந்தே ஆளும் உரிமை கிடைத்தது என்பதை மஹிந்த மறந்துவிடக்ககூடாது! – மாவை

“அரசிடம் இறைமை இல்லை. அது மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த இறைமையை மக்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களை ஆளும் உரிமை அந்த அரசுக்கு இல்லை. அந்த அடிப்படைக்கோட்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட எமது இறைமையை நாம் யாருக்கும் கொடுக்கவில்லை.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

mavai mp

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 8ஆம் ஆண்டு நினைவுப் பேருரைக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவை.சேனாதிராஜா எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“தம்பி ரவிராஜ் அரச படைகளினால் கைதுசெய்யப்படும் இளைஞர்களுக்காகப் பேராடியவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து கொண்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை எடுத்துக்கூறும் இளம் தலைவராக விளங்கினார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் அற்ற பேரினவாதக் கோட்பாடுகளுடன் ஆட்சிசெய்யும் அரசினாலும் அதனையொத்த பொளத்த இனவாதிகளாலும் ஜனநாகத்திற்காக, நல்லாட்சிக்காக உழைத்தவர்கள் அழிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களில் அதற்காக குரல் கொடுப்பதற்காக மக்கள் கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டது.

அதன் பங்கு பணிகள் உத்தமானவை. எம்முடைய பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் என பலர் எம்மிடத்தில் பேசிவந்திருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் ரவிராஜ் அப்பணியை செய்தார். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சினைகைளைக் கூறினார்.

ஊடகங்களில் அவர் கூறும் கருத்துக்களால் கொதிப்படைந்த தீவிரவாத சிங்களவர்கள், ஆட்சியின் அங்கங்கள் அதனை ஒரு குற்றமாகப் பார்த்தன. ஓர் எறும்பு வெளிப்படுத்தும் உணர்வைக்கூட நாம் வெளிப்படுத்துவற்கு இங்கு இடமில்லை. எமது இந்து மக்கள் கீரிமலை போன்ற கடற்கரையோரங்களுக்குச் சென்று ஈமக்கிரியைகளைச் செய்வதற்கு கூட மஹிந்த ராஜபக்‌ஷ அரசு அதிகமாக இடமளிப்பதில்லை.

எம்முறைய உயிர்நீத்த உறவுகளைப் புதைத்த இடங்களுக்குச் சென்று கண்ணீர் விடக்கூடாது என்பதற்காக அவற்றை அழித்த இந்த நாடு நாகரிகமானதா? உலகத்திலே எந்த இனம் தன்னுடைய மொழி, அடையாளம், கலைகலாசாரங்களைப் பேணிப்பாதுகாக்க தவறிப்போகின்றதோ அது ஒழுக்கமற்றதாகிவிடுகின்றது. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். தன்னுடைய மொழி, அடையாளம், கலாசாரங்களை பேணிப்பாதுகாத்து தன்னுடைய தேசதித்தில் தம்மைத்தாமே ஆளம் மக்கள் தான் நாகரிகமுள்ளவர்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஏனைய இனங்கள் அழிந்து போயிருக்கின்றார்கள் என்றே வரலாறு கூறியுள்ளது. நாம் நாகரிகமுள்ள இனம் என்பதை நிரூபிப்பதற்காகவேதான் தம்பி ரவிராஜ் உட்பட இத்தனை ஆயிரம் உயிர்களும் தியாகம் செய்து விதைக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்காலத்திலே எமக்கு நிகழ்ந்த பேரழிவுகள் ஏற்படுத்திய பேரதிர்ச்சியால் வீழந்து விடாது நாங்கள் வாழ்வது போராடுவதற்கு நாங்கள் போராடுவது எம்மை நாம் ஆள்வதற்கு என்ற மனஉறுதியுடன் இருக்கவேண்டும். இந்த அரசின் சிந்தனை என்ன? நாம் பாரம்பரியமாக வாழ்ந்த எமது பூமியை இராணுவத்தினூடாகவும் புத்தகுருமார் ஊடாகவும் அபகரித்து இராணுவத்தின் பாதுகாப்புடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எமது சந்தையிலே சந்தைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறிருக்க எமது மீனவர்கள் போதிய சுதந்திரங்கள் இல்லாது கடலுக்குச் செல்லமுடியாது தடுக்கப்பட்டிருக்கின்றபோது தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பாவித்து இராணுப்பாதுகாப்புடன் கடல்வளங்களை அள்ளிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.

கடந்த அறுபது ஆண்டுகளாக இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் எம்மினத்தை பூண்டோடு அழித்து சிங்களவர்களை குடியேற்றினால் எமக்குள்ள இறைமை அழிக்கப்பட்டு, சுயநியர்ணய உரித்தற்ற அரசியல் உரித்தற்றவர்களாக மாற்றியமைப்பதுதான் மஹிந்த சிந்தனை. இதனையே கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இது இன்று முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். அரசிடம் இறைமை இல்லை. மக்களிடம் தான் இறைமை இருக்கின்றது. அந்த இறைமையை மக்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களை ஆளும் உரிமை அந்த அரசுக்கு இல்லை. இது அடிப்படைக்கோட்பாடு. மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட எமது இறைமையை நாம் யாருக்கும் கொடுக்கவில்லை. எமது இனம் வாழ வேண்டும். எமது இனம் ஆளவேண்டும். அதற்காக எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்காக தமிழர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும். அதற்காகவே தான் இவ்வளவு இழப்புக்கள், அழிவுகள் கண்முன்னாலே நடைபெற்ற பின்னரும் தாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் – அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவர்களாக தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகச் சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி எமது இலக்கை அடைவதற்கு அனைத்து தமிழ் பேசும் தரப்பும் ஒன்றாக இணைந்து நிற்கவேண்டும்” – என்றார்.

Related Posts