Ad Widget

மகேஸ்வரி நிதியத்தின் மணல் கொள்ளை வடக்கு மாகாண சபை தடுத்து நிறுத்தும் – ஐங்கரநேசன்

P-Inkaranesanமகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் கொள்ளைகளை வடக்கு மாகாணசபை சட்டரீதியாகத் தடுத்து நிறுத்தும். எமது சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் தனிநபரோ அல்லது தனியயாரு அமைப்போ இயற்கை வளத்தை அனுபவிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாதென்று வடக்கு மாகாணச் சுற்றுச் சூழலியல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்தார்.

கோண்டாவிலிலுள்ள பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் சங்கத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது.

இதில், கலந்துகொண்ட லொறி உரிமையாளர்கள் மகேஸ்வரி நிதியத்தின் ஏகபோக உரிமைத்தனமான செயற்பாட்டால் தாம் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக் காட்டினர்.

“நாம் கடன் பெற்றே எமது பாரவூர்திகளை வாங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள் எல்லோரும் மணல் ஏற்றி இறக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது மகேஸ்வரி நிதியம் தன்னிச்சையாகச் செயற்பட்டு, இருவருக்கு மணல் ஏற்றி இறக்கும் உரிமையை வழங்கியிருக்கின்றது. இதனால் நாம் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளோம். வாங்கிய கடன்களைச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றோம். எனவே அவர்கள் ஆரம்பத்திலிருந்ததைப் போன்று சகலரும் தொழிலில் ஈடுபட வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்” என்று மாகாண அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.

எங்கள் எல்லோரிடமும் தலா 5 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் சேவையில் ஈடுபடுவதற்காக வாங்கப்பட்டது. அத்துடன் சேவைக் கட்டணம் என்ற பெயரில் எங்களின் சேமிப்புப் பணமும் கழிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் எங்கள் சேவையை இடைநிறுத்தியுள்ளதால் அந்தப் பணத்தை திருப்பித் தரவேண்டும்” எனவும் இதன்போது கோரப்பட்டது.

இதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர், தனிப்பட்ட நிறுவனத்துக்கு இயற்கை வளத்தை அனுபவிக்கும் ஏகபோக உரிமை கிடையாது. மேலும் மணல் கட்டடத் தேவைக்கு மாத்திரம் உரியது அல்ல. அவற்றைப் பயன்படுத்தி நாம் கண்ணாடி தயாரிக்க முடியும்.

அத்துடன் மணல் எமது சூழலுக்கு முக்கியமானது. இவற்றைக் கருத்தில் கொண்டே நாம் செயற்பட வேண்டும். நீதிமன்றம் மகேஸ்வரி நிதியத்துக்கு அறிவுறுத்தல் வழங்கிய பின்னரும் அவர்கள் மணல் கொள்ளையிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் இது தொடர்பில் தகவல்கள் திரட்டியவர்கள் கூடக் கொல்லப்பட்டுள்ள நிலைமை காணப்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.

பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இவர்கள் மணல் அகழ்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட அளவு எவ்வளவு? இவர்கள் எவ்வளவு அகழ்கின்றார்கள் என்ற விபரங்களை வைத்திருக்கின்றார். ஆனால் தர மறுக்கின்றார். காரணம் உயிர் அச்சுறுத்தலே.

நாம் இவை ஒன்றையும் கண்டு பின்வாங்கப் போவதில்லை. எமது வடக்கு மாகாண சபையின் ஊடாக சட்டத்துக்கு அமைவாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – என்றார்.

Related Posts