Ad Widget

மகாத்மாக்களின் மொழியைப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளாததாலேயே கிட்டுகள் வேறு மொழியில் பேசத் தொடங்கினார்கள் : பொ.ஐங்கரநேசன்

மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை மொழியிலேயே பேசினார். ஆனால், மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத் தொடங்கினார்கள். என்று வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நேற்று புதன்கிழமை (05.07.2017) நடைபெற்ற மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிட்டு முன்பள்ளி என்ற பெயரே இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் இலக்கும் கிட்டுவின் இலக்கும் ஒன்றுதான். அவரவர் தேசங்களின் விடுதலையே அவர்களின் இலட்சியங்களாக இருந்தது. ஆனால், இரண்டுபெரும் தங்கள் இலட்சியங்களை அடைவதற்காக ஆட்சியாளர்களுடன் பேசிய மொழி வெவ்வேறானது.

ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, அவ்வாறான போரட்டம் ஒன்று இங்கு நடைபெற்றதற்கான அடையாளங்கள் எதுவும் எஞ்சிவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாக இருக்கிறது. அதனால்தான் கிட்டு முன்பள்ளி மகாத்மா முன்பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டது. ஈழம் என்ற சொல்லைக்கூட அரசாங்கம் ஏற்றுகொள்ளத் தயாராக இல்லை. ஈழம் விடுதலைப்புலிகளின் கண்டுபிடிப்பல்ல் அது இலங்கையின் பண்டைய பெயர். அண்மையில் கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலையொன்றின் பீடத்தில் இருந்த ஈழம் என்ற சொல் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக அகற்றப்பட்டிருக்கிறது. இவற்றை நாங்கள் யாராவது சுட்டிக் காட்டினால், அரசியல் அரங்கில் இருந்து எங்களை அகற்றவும் எம்மவர் சிலரின் துணையோடு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

தமிழ்மக்களிடையே ஆயுதப் போராட்டம் முளை விட்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. அரசாங்கம் இடதுகையில் தூக்கிய கத்தியைத் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டே இனி சமாதானம் என்று சொல்லி வலது கையால் எங்களுடன் கைகுலுக்கப் பார்க்கிறது. இதுபற்றி விழிப்புணர்வு எங்களுக்கு இல்லாவிடில் நாம் தொடர்ந்தும் எமாற்றப்படுவோம். ஆயுதங்களை நாம் மீளவும் தூக்க வேண்டாம். ஆனால், ஆயுதப் போராட்டம் நடைபெற்றதற்கான காரணங்களை, ஆயுதப் போராட்டத்தின் அளப்பரிய தியாகங்களை யாரும் மறந்துவிடக் கூடாது. எமது இளைய தலைமுறையினரிடம் இவை எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts