Ad Widget

மகளிர் தினத்தை துக்கத் தினமாக அனுஷ்டிக்க காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் திகதி முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் மகளிர் தினத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்க தீர்மானனித்திருப்பதாகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரபாகரன் றஞ்சனா, “போர் நிறைவடைந்த காலப்பகுதியில் இருந்து காணாமலாக்கப்பட்டவர்கள், வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், படையினரிடம் சரணடைந்தவர்கள் இருக்கின்றாகள். இவர்களை இன்று பத்து ஆண்டுகளாக தேடி ஐ.நா. சபையிடம் முறையிட்டு இன்றும் தேடி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

2017ஆம் ஆண்டு வீதிக்கு இறங்கி பேராட்டத்தினை ஆரம்பித்த நாம், தொடர்ந்தும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தார்கள். அவர்களிடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று கோரியும் இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை. போராட்டம் ஆரம்பித்து எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி மூன்று ஆண்டுகள் கடக்கப்போகின்றன.

இன்றும் எங்கள் உறவுகள் பிள்ளைகளுக்காக, உறவுகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். மார்ச் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு துக்கநாளாக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். இந்த போராட்டத்திற்கு அனைவரம் ஆதரவளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts