Ad Widget

மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – தமிழினியின் தாயார்

தனது மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மகளிர் அரசியற்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

tamilini-mother

ஐபிசி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக தனது மகள் போராட்டத்தில் இணைந்ததாகவும், இறுதிவரை தனது இலட்சியத்தில் எவ்வித சோர்வும் அடையாது செயற்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வவுனியா நலன்புரி நிலையத்தில் வைத்து தனது மகள் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாகவும் அதில் உண்மை இல்லை என குறிப்பிட்ட தாயார், தனது மகள் தன்னுடனே இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் ஓமந்தை பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் தமிழினி தனக்கென சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை எனவும், தான் சென்ற வழியை உண்மையுடன் செயற்படுத்த வேண்டும் என்பதற்காகவே செயற்பட்டு வந்ததாகவும் கூறினார்.

தாம் அன்றும் ஏழ்மையுடன் வாழ்ந்ததாகவும், தற்போதும் ஏழ்மையாகவே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட தமிழினியின் தாயார், தனது மகளின் மரணத்தை வைத்து எந்த அரசியல்வாதிகளும் அரசியல் செய்யக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழினி வாழ்ந்த வீடு தற்போதும் தற்காலிக கொட்டகையாகவே காணப்படுகின்றது. தமிழினி உயிருடன் இருந்த காலத்தில் திரும்பி பார்க்காத அரசியல்வாதிகள் அவரின் இறுதிச்சடங்கில் தாமே தமிழினியை காப்பாற்றிது போன்று பாசாங்கு காட்டியதாகவும் இறுதி அஞ்சலி உரைகளை நிகழ்த்தி தமிழினியின் மரண சடங்கில் அரசியல் நடத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழினி உயிருடன் இருந்த காலத்திலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்த போதோ திரும்பி பார்க்காத தமிழ் அரசியல்வாதிகள், இன்றும் ஏழ்மையுடன் வாழும் குடும்பம் தொடர்பில் மரண சடங்கின் பின்னர் எட்டியும் பார்க்கவில்லை என்பதே தமிழினியின் தாயாரின் ஆதங்கமாகும்.

தனது மகளின் மரண சடங்கில் அரசியல் உரையாற்றி அரசியல் லாபம் காண முற்பட்ட அரசியல்வாதிகள், இனியும் தமிழினியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என நினைப்பது எந்த ஒரு தாயினதும் மன நிலையை தற்போது உணர்த்தி நிற்கின்றது.

தமிழினியை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள், அவர்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழினியின் குடும்பம் உட்பட அக்கிராமத்தில் வசிக்கும் 400 குடும்பங்களிற்கு கிடைக்க வேண்டிய வீட்டுத்திட்டங்கள் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதே தமிழினிக்கு செய்யும் நன்றி என்பதனை யாரும் மறுக்க முடியாது.

Related Posts