Ad Widget

‘மகனை திருத்திதாருங்கள்’: தந்தை பொலிஸாரிடம் மன்றாட்டம்

சுழிபுரத்திலுள்ள தனது கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்ட குழுவில் தனது மகனும் இடம்பெற்றிருந்தை அறிந்த தந்தை ஒருவர், தனது மகனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து, அவனைத் திருத்தி தருமாறும் பொலிஸாரைக் கேட்டுக்கொண்ட சம்பவமொன்று, பொன்னாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, சிறுவனான மகனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அந்த திருட்டுக் குழுவில் இருந்த ஏனைய மூன்று சிறுவர்களையும் அந்த சிறுவர்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறுவனின் பெற்றோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொன்னாலையில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர், பாடசாலை செல்லும் சிறுவனான தனது மகன், நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரை பலமுறை தண்டித்தபோதும், அவன் அங்குள்ள ஒரு இளைஞனின் தூண்டுதலின் பேரில் தனது தந்தையின் கடையில் மூன்று சிறுவர்களோடு இணைந்து தனது கைவரிசை காட்டியுள்ளார்.

இதனையறிந்த தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அவனைப் பிடித்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், எப்படியாவது அவனைத் திருத்தி, அவன் பூரணமாக திருந்திய பின்னர் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரைக் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தனது மகனை திருட தூண்டிய நபர்களை கைது செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

கைது செய்ப்பட்ட சிறுவர்களில் ஒருவன், கொழும்புத்துறையைச் சேர்ந்தவன் என்றும் அவனும் பொன்னாலையில் வந்து நின்று இவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாகவும் அந்தச் சிறுவன் கஞ்சா பயன்படுத்துபவன் என்றும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts