Ad Widget

மகனைக் காண மிகுந்த ஆவல், உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் உருக்கம்

santhan -motherதனது பிள்ளையை விடுவித்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், 23 வருடங்களாக தனது பிள்ளையைப் பார்க்கவில்லை என்றும், பிள்ளையைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனின் தாயாரான தில்லையம்பலம் மகேஸ்வரி தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் உடுப்பிட்டியில் வசித்துவரும் சுதேந்திர ராஜா (சாந்தனின்) தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தெரிவித்ததாவது

நேற்று (நேற்று முன்தினம்) எனது மகனின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியது.

எனக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று (நேற்று) எனது மகனை விடுதலை செய்வதாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாக செய்திகளைக் கேட்டேன். சந்தோ­த்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

மகனின் விடுதலைக்காக நான் கடவுள்களிடம் நேர்த்தி வைத்திருந்தேன். பிரார்த்தனைகளும் செய்திருந்தேன். எனது மகனைக் காணாத 22 வருடங்களும் நான் ஒரு நேரம் மாத்திரமே உணவை உண்டு உபவாசம் கடைப் பிடித்தேன்.கடவுள் கைவிடவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடவுள் மாதிரி .எனது பிள்ளையை விடுவித்து விட்டார். அவருக்கு நன்றிகள். எனது பிள்ளையின் விடுதலைக்காக எங்களை விட உலகமெங்கிலுமுள்ள பலர் குரல் கொடுத்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாகச் செங்கொடி உயிரைக் கொடுத்திருந்தாள். எல்லோருக்கும் ஒட்டுமொத்த நன்றிகள் என்றார் அவர்.

அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார் – சாந்தனின் சகோதரன்

இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். அதை விட என் முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார். என்று சாந்தனின் சகோதரனான மதி சுதா தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நாளை நான் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இந்நாளாகதான் இருக்கமுடியும். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த சந்தோசத் தடைகளும் இல்லை. இதே தான் ஏனைய ஐந்து பேரின் குடும்பத்திலும் இருக்கும் என்று தெரியும் என்றும் அவர் கூறினார்.

அதை விடவும் எனக்கு முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனிமேல் மூன்றுவேளைகளும் சாப்பிடுவார். அதே போல நாம் உண்ணும் உணவுகளையும் உண்ணுவார். காரணம் அவர் ஒரு நேரம் மட்டும் தான் உணவு உண்பதுண்டு, அதுவும் அங்கு அண்ணா சாப்பிடாத சாப்பாடெதுவும் அவர் சாப்பிடுவதேயில்லை. அது கூட பல தடவை விரதம் என்றால் வெறும் சாணி நிலத்தில் போட்டுத் தான் சாப்பிடுவார். நரகத்தில் வாழ்வது வேறு நரகத்தை பார்த்து வாழ்வது வேறு என்ற சொல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

நாம் இப்போது சொர்க்கத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறோம். அதே போல என் தாய் போல வாழும் ஒவ்வொரு தாயின் கண்ணீரும் துடைக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை. அண்ணாவின் ஆசையும் தன் இறுதிக்காலத்தை தான் பிறந்த மண்ணில் முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பல நூல்களை எழுதிய ஒரு சிறந்த இலக்கியவாதியான அவரை சட்டமும் அனுமதித்து எம்மோடு சந்தோசமாக வாழ வழி அமைத்துத் தர வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறிய அவர் அண்ணனின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் என்னுடைய குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts