Ad Widget

பௌத்த விகாரைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லை!

வட பகுதியெங்கும் பௌத்தர்களே இல்லாத இடங்களில் கூட அடாத்தாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள், இவை திட்டமிட்ட இனத்துவ அடையாள அழிப்பின் நோக்கமே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முதலமைச்சருக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது நயினாதீவில் 62 அடி சிலை புத்தர் சிலை அமைப்பு தொடர்பில் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், இதுவொரு இனத்துவ அடையாள அழிப்பின் நோக்கமே எனத் தெரிவித்தார்.

வடக்கின் தமிழ் மக்களின் இடங்களை ஆக்கிரமித்து விகாரைகள் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் கலாசார, பண்பாடுகளை அழிக்கும் வகையில் இவ்வாறு பல நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

அவரது கருத்தை ஆமோதித்த மேலும் பல மாகாண சபை உறுப்பினர்கள், இத்தகைய இனத்துவ அடையாள அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.

இந்நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் போதாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அப்படியாயின் வடபகுதியெங்கும் நடைபெற்ற இன அழிப்புக்குப் பின்னர் தற்போது இனத்துவ அடையாள அழிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவோம் என மாகாண சபை உறுப்பினர்கள் பலர் யோசனை தெரிவித்தனர்.

எனினும் உடனடியாக அவ்வாறான ஒரு பிரேரணை வேண்டாம் எனத் தெரிவித்த முதலமைச்சர், இனத்துவ அடையாள அழிப்பு தொடர்பில் உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்து பேசுவோம். இவற்றைத் உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதியிடம் கோரிக்கை விடுப்போம். அதன் பின்னர் தீர்மானம் குறித்து யோசிப்போம் என்றார்.

Related Posts