Ad Widget

போலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!

தனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தலைமறைவாகியுள்ள முகாமையாளரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிறப்பித்துள்ளார்.

தனியார் வங்கி ஒன்றின் சங்கானைக் கிளையில் பணியாற்றிய முகாமையாளம் மற்றும் கடன் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மூவர் என ஐந்து பேர் இணைந்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை அடகுவைத்து முற்பணம் பெற்றிருந்தனர்.

இந்த மோசடி தொடர்பாக 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற நிலையில் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்த முகாமைத்துவம், மோசடி குறித்து குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்தது.

இதுதொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வங்கி அலுவலகர்கள் ஐவருக்கும் எதிராக முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

எனினும் மோசடி இடம்பெற்ற நீதிமன்ற நியாயாதிக்கம் மல்லாகம் நீதிமன்ற வலயம் என்பதால் வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

வங்கிக் கிளையின் முகாமையாளர் ரமணன் என்பவர் தலைமறைவாகிய நிலையில் உத்தியோகத்தர் மற்றும் 3 வாடிக்கையாளர்களையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் தலைமறைவாகியுள்ள முன்னாள் முகாமையாளரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவையும் நீதிவான் பிறப்பித்துள்ளார்.

Related Posts