Ad Widget

போலிச் சாமியாரை நம்பி தங்க நகைகளை இழந்த குடும்பம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார்.

இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சாமியார் அந்தக் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் நீக்குவதாக சாமியார் உறுதியளித்துள்ளதுடன் குடும்பத்தினருக்கு தோஷம் இருப்பதாகவும் அதனை நீக்குவதற்கு 20 ஆயிரம் ரூபா பணம் வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தமது கஷ்டங்களெல்லாம் நீங்கினால் போதும் என நம்பிய குறித்த குடும்பத்தினர் சாமியர் சொன்னதைக் கேட்டு, பரிகாரம் செய்வதற்கு சம்மதித்தனர்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு தனது சீடருடன் வந்த சாமியார் பூஜைகளை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டிலுள்ளவர்கள் தங்களது தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி செம்பில் வைக்குமாறு கூறியுள்ளார். குடும்பத்தினரும் சாமியாரின் சொற்படி தங்க நகைகளைக் கழற்றி செம்பில் வைத்துள்ளனர்.

பூஜை செய்த தண்ணீரை வீட்டுக்கு வெளியே குடும்பத்தினருடன் சென்று தெளித்து விட்டு வருமாறு சீடரைப் பணித்த சாமியார், அந்தச் சந்தர்ப்பத்தில் செம்பிலிருந்த நகைகளை எடுத்துவிட்டு அதற்குள் கற்களைப் போட்டு துணியால் மூடியிருக்கிறார்.

அதனை அறிந்திராத குடும்பத்தினரிடம், “செம்பில் நகைகளைப் போட்டு மூடியிருக்கிறேன். பத்து நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் இங்கே வருவேன். அதுவரை செம்பை யாரும் திறந்து பார்க்க வேண்டாம்” எனக் கூறிச் சென்றுள்ளார்.

பத்து நாட்கள் கழித்தும் சாமியார் வராததைத் தொடர்ந்து வீட்டார் செம்பைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. தமது நகைகள் எதுவும் இல்லாததையும் போலிச் சாமியாரின் கபட நாடகத்துக்கு தாம் ஏமாந்துவிட்டதையும் உணர்ந்திருக்கிறார்கள்.இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts