Ad Widget

போர்க் குற்ற விசாரணை பொறிமுறை இவ்வருட நடுப்பகுதி ஆரம்பம்

போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய சர்வ மதத் தலைவர்கள், முன்னுதாரணம் கொண்ட சர்வதேச நாடுகள் மற்றும் அரச பிரமுகர்களுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் பெப்ரவரி மாதமளவில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதேபோன்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இந்த வருடத்தில் விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் உள்ளகப் பொறிமுறையை உருவாக்கி, அதனை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இப்பணிகளை புதிய அரசியலமைப்பு யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் முழுமையாக தொடர்வதற்கும் அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அரச தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது குறித்து, ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts