Ad Widget

போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் மோடியுடன் ரணில் இன்று முக்கிய பேச்சு

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் ஜெனிவாவில் இந்தியாவின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்காகவும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார்.

இன்று இந்தியாவின் தலைநகர் டில்லிக்குப் பயணமாகும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் இரு தரப்பு பாதுகாப்பு, பொருளாதார, வலய முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை மேலும் பலப்படுத்த முக்கிய பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

பிரதமர் ரணிலின் இந்திய விஜயத்தில் அவரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, அபிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதராக நியமிக்கப்படவுள்ள ஹெசல வீரக்கோன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் கடந்த 8 மாதங்களுக்காக அதிகாரபூர்வமாக எந்தவொரு வெளிநாட்டுக்கும் விஜயம் செய்யவில்லை.

இந்நிலையில், கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற அவர், தமது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இந்தியா செல்கின்றார். இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் ரணில் இந்தியாவின் தலைநகர் டில்லிக்குச் செல்கின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே, பிரதமர் ரணிலின் இந்திய விஜயம் அமைந்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கை விவாதத்திற்கு வருகின்றது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பேரவையின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்படடுள்ளது. எனவே, ஐ.நா. அறிக்கையின் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பிரதமர் ரணில், இந்தியப் பிரதமர் மோடிக்கு விளக்கமளித்து, டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என இராஜதந்திர வட்டாரங்களினூடாக அறியமுடிகின்றது.

இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள உள்ளகப் பொறிமுறையூடான விசாரணைக்கு, சர்வதேச விசாரணையை வலியுறுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு பிரதமர் மோடி இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் கோரவுள்ளார் என்றும் அந்த வட்டாரங்களினூடாக மேலும் அறியமுடிகின்றது.

Related Posts