Ad Widget

போர்க்குற்ற விபரங்களை அறிந்த ஜெனரலுக்கு இராஜதந்திரப் பதவி! – இராணுவத் தரப்புக்குள் பதற்றம்

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்னிப் போரில் பெரும் பங்கெடுத்திருந்த 58வது இராணுவ டிவிசனின் பிரதிக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவரும் வன்னியில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருந்ததாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களை படுகொலை செய்வதற்கான இரகசிய உத்தரவு குறித்தும் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து இராணுவத்திற்குள் எதிர்ப்பு வலுத்த நிலையில் குறித்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருந்தார்.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக மீண்டும் இராணுவ சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள அவர், வெளிநாடொன்றின் இராஜதந்திர பதவிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ இரகசியங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான தெளிவான தகவல்களை அறிந்துள்ள குறித்த அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர பதவி இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts