Ad Widget

போர்க்குற்ற விசாரணை ஜெனிவாவில் இருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன; சீ.வி. விக்னேஸ்வரன்

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் – வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்,

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பல இனப் படுகொலைகளைத் தொடர்ந்தும், வட்டக்கண்டல் படுகொலைக்குப் பின்னரும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு சொல்லொண்ணாக் கொடூரங்கள் இழைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காகவே தற்போது போர்க்குற்ற விசாரணை ஜெனிவாவில் இருந்து முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுத்து நட்டஈடு கொடுத்து வேலையை முடிப்பதற்கு அரசாங்கம் முனைவதாகக் குறிப்பிட்ட அவர்,

இதற்காக சர்வதேசத்திடம் இருந்து நட்ட ஈட்டுப்பணம் பெறுவதற்கு அரசாங்கம் முனைவதாகவும் இதனால் தான் 1500 மில்லியன் டொலர்கள் சமாதான முன்னெடுப்புக்களுக்குக் குறித்தொதுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பணம் ஏன் யுத்தக் குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தப் பாவிக்கப்படவில்லை, போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்குப் புதிய வாழ்வளிக்கப் பயன்படுத்தப்படவில்லை, வடமாகாணத்தில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அப்புறப்படுத்த உபயோகிக்கப்படவில்லை, என்றும் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெறும் கிணறுகள் வெட்டி, மலசலகூடம் மற்றும் வீடுகள் அமைத்து, தண்ணீர் தாங்கிகளைக் கட்டுவது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் வழி வகுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை உரிய முறையில், சந்தேகங்களுக்கு இடமின்றி நடைபெற்று குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே வட்டக்கண்டல் படுகொலையில் உறவுகளை இழந்த சகோதர சகோதரிகளின் மனதைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்தக்கூடிய காரியம் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts