Ad Widget

ஜனாதிபதியின் கருத்திற்கு தக்க பதில் வழங்குவேன்! சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை குறித்து அரச தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. தீர்மானத்துக்கு முரணான வகையில் அரச தரப்பினர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் எனக் குறிப்பிட்ட சம்பந்தன், இதற்குரிய பதிலை நாளை மறுதினம் சபையில் வழங்குவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட, பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே, அண்மையில் ஐ.நா.வால் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

கால அவகாசம் வழங்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே படையினரை குற்றவாளி கூண்டில் ஏற்ற மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நேற்று யாழ். சென்றிருந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜிதவும் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts