போரின் போது குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும்: வடக்கு முதல்வர்

போரின் போது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை. அதனையே சர்வதேசமும் வலியுறுத்துகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ .வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் நிறைவில் கடந்த சனிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க போரினை வெற்றி கொண்ட ராணுவத்தினரை தண்டிக்க இடமளிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்து தொடர்பில் ஊடகவியலளார்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சந்திரிக்கா அம்மையார் குறிப்பிட்டது புதுமையானதல்ல. இதே கருத்தினையும் எமது முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டார்.

போரின் போது குற்றமிலைத்த ராணுவத்தினரையே தண்டிக்குமாறு நாமும் வலியுறுத்துகின்றோம். சர்வதேசமும் வலியுறுத்துகின்றது.

அதனை விடுத்து போரினை வென்ற ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் தண்டிக்குமாறு நாமும் கேட்கவில்லை. சர்வதேசமும் கேட்கவில்லை.

உதாரணமாக ஒரு பாடசாலையினை எடுத்துக்கொண்டால், அந்த பாடசாலையில் ஒரு மாணவன் பிழை செய்தால், அந்த மாணவனை தண்டிக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக பாடசாலையினை தண்டிப்பதாக அமையாது.

தனிப்பட்ட நபர் ஒருவர் சட்டத்திற்கு முரணான வகையில், போர் நடைபெற்ற காலத்திலும் சரி போர் முடிவுற்ற காலத்திலும் சரி குற்றமிளைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க கோருகின்றோமே தவிர, அனைத்து ராணுவத்தினரையும் தண்டிக்க வேண்டுமென்று எங்கும் கேட்கவில்லை. இந்த விடயத்தினையே சந்திரிக்கா அம்மையாருக்கும் கூறுகின்றேன்” என்றார்

Related Posts