Ad Widget

போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோத்தாபய

போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன்.

நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால் அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி எப்போதும் கூறுவார்.

எனது கொள்கைக்கு இணக்கமான ஒரு தலைவரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது.

போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல.

எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால் அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று அவரால் எப்படிக் கூற முடியும்? இது ஒரு நகைச் சுவை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்காது என்றும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியையே அதிகப்படுத்தும் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம் இந்த சமூகங்களை இணைக்க முடியும் என்று எவ்வாறு கூற முடியும்? அவ்வாறு செய்ய நினைத்தால் அனைவருக்குமான நல்லிணக்கம் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் சென்று, இந்த விடயங்கள் பற்றிப் பேசினால் சமூகங்கள் ஒன்றுபடாது. அது இடைவெளியைத் தான் அதிகப்படுத்தும்.

தமிழர்கள் போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசும் போது, பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள், பௌத்த மதகுருமார் மற்றும் காவல்துறையினரின் படுகொலைகள் போரின் போது தாம் எதிர்கொண்ட கொடூரங்கள் பற்றி பேசுவார்கள்.

அது போருக்குப் பிந்திய குணமாக்கல் செயற்பாடுகளின் வேகத்தைக் குறைக்கும்.” என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சீனா தொடர்பான நிலைப்பாடே ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் செயற்படும் வெளிநாட்டு ஊடகவிலாளர்களை சந்தித்த போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும் அதனை அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் நூல் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சீனா தொடர்பான விவகாரம் தலைதூக்க ஆரம்பித்ததாக கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

சீனாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறை ஆகியவற்றை சீனாவிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அஜித் தோவல் இரண்டு தடவைகள் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts