Ad Widget

போரின்போது பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி – சரத் பொன்சேகா

தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ராஜபக்ஷவினரின் நோக்கம் ஒன்றுதான். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சகல இடங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தைப் பெற்றுக்கொள்வது. ஆனால் இது ஜனநாயக அரசியலில் நல்லதொரு செயற்பாடாக நாம் கருதவில்லை.

பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம். அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் தெரிவித்தார்.

பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி. தேர்தலில் தமிழர்கள் வாக்கை நிறுத்துவதற்குப் பிரபாகரன் இணங்கியதற்குப் பிரபாகரனுக்கும் கடல் புலிகளுக்கும் அதி நவீன படகுகளைப் பெற்றுக்கொடுக்க தாம் இணக்கம் தெரிவித்ததாக பசில் என்னிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைகளில் அமரர் தொண்டமானும் இருந்ததாக என்னிடம் தெரிவித்தார்.

நாம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருந்த வேளையில், ராஜபக்ஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருந்தனர்.

பிரபாகரனைத் துரோகி எனக் கூற அச்சத்துடன் இருந்தனர். பிரபாகரனை மதிப்புக்குரிய பிரபாகரன் என்றே இவர்கள் கூறினார்கள். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு ஆற்றிய உரையை எடுத்துப்பாருங்கள். அதில் அவர் அவ்வாறே கூறினார். இன்று யுத்தம் முடிந்துவிட்டதுடன், பிரபாகரன் உயிரிழந்த பின்னர் வீரர்கள் போன்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்த அழிவிற்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் ஒரு விதத்தில் ஆட்சியாளர்கள் காரணம் என்பதே உண்மையாகும். பல பொதுமக்கள் உயிரிழந்தமைக்கும் அழிவுகளைச் சந்திக்கவும் ஆட்சியாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும்” என அவர் மேலும் தெரவித்துள்ளார்.

Related Posts