Ad Widget

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – முதலமைச்சர் சி.வி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வை இழந்திருக்கும் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய கடமையுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

vicky0vickneswaran

கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி நினைவு நாளும் நினைவுப் பேருரையும், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகம் செல்லா மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முக்கியமானதாக விழிப்புலனற்றோர் தமது வாழ்நாள் முழுவதும் அதே கண்பார்வையற்ற நிலையிலேயே தொடர்ந்து வாழ்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே அவர்களின் மனோநிலைகளையும் சூழ்நிலைகளையும் சுயபிரச்சினைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம், அவர்களின் தகைமைகளையும் அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள எத்தனிக்க வேண்டும்.

அவர்களுக்கு பல தகைமைகள் கெட்டித்தனங்கள் வழக்கமாக இருக்கும். ஆனால், நாம் தான் அவற்றை அவதானித்து குறித்துகொள்ள வேண்டும். தம் கையே தமக்குதவி என்ற பாடத்தை அவர்கள் கற்க வைக்க வேண்டும்.

தம் மீதும் தம் சக்தி மீதும் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்க வைக்க வேண்டும். தாமாக செய்ய முடியாதிருக்கும் ஒரு சில நடவடிக்கைகளை விட விழிப்புலன் அற்றோரால் மற்றைய எல்லா பொது காரியங்களையும் தாமாக செய்ய முடியும் என்பதை அவர்களை உணர வைக்க செய்ய வேண்டும்” என்றார்.

இப்பொழுதெல்லாம் விழிப்புலன் அற்றவர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பாடங்களே கற்றுத் தருகின்றார்கள். உதாரணத்திற்கு ஒவ்வொரு விழிப்புலன் அற்றவரும் ஒரு காரியத்தை தாமாக தனக்கே உரிய ஏதோ ஒரு தனித்துவமான விதத்தில் செய்ய பழகி இருப்பார்கள்.

ஆகவே அவர்களிடம் நாம் ஏதாவது உதவி தேவையா என்று முதலில் கேட்க வேண்டும். நீங்களாக அவர்களுக்கு ஏதேனும் செய்ய எத்தனித்தால் அவர்களின் வழமையான நடைமுறை பாதிக்கப்படும். போரின் பின்னர் வாழ்வு பாதிக்கப்பட்டு தினமும் உடல், உள தாக்கங்களுக்கு உட்பட்டு எதிர்காலம் கேள்விக்கு உரியதாகி பலர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு எம்மாலான பல வசதிகளையும் நாம் ஏற்படுத்தி கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுயமரியாதையுடன் சுகதேகிகளாய் வாழ நாம் வசதி அளித்து கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts