Ad Widget

போராட்டத்திற்கு யாழ். ஊடக அமையம் முழு ஆதரவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதத்தில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

jaffna-media

தமிழ் மக்களை பொறுத்தவரையில் காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்பதே யதார்த்தமாகும். அந்தவகையில் தமிழ் மக்கள் ஐ.நா சர்வதேச விசாரணையினை நீதி பெறுவதற்கான சந்தர்ப்பமாக எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தமிழ் மக்களின் அத்தகைய எதிர்பார்ப்பு நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ஐ.நா சர்வதேச விசாரணையினை மார்ச் மாதத்திலேயே வெளியிடக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமுகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ். ஊடக அமையம் முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றது.

குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்தவரையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போனார்கள். மேலும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் போர் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள போதும் அவ்வாறான காணாமல்போதல்கள், படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை.

மாறாக குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் நிலையே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையே சாதாரண பொதுமக்களுக்கும் நடைபெற்றமை வரலாற்றுப் பதிவுகளில் காணக்கிடைக்கிறது.

உள்ளக விசாரணை பொறிமுறையில் தமிழ் மக்கள் தமது நீண்டகால அனுவங்களின் அடிப்ப டையில் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில் ஐ.நா சர்வதேச விசாரணையே தமிழ் மக்கள் நீதி பெறுவதற்கான சந்தர்ப்பம் என்பதோடு தமிழ் மக்களின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கும் அது தீர்வாகும் என்பதே அவர் தம் நம்பிக்கை.

ஐ.நா சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் சர்வதேச விசாரணை அறிக்கையினை மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டும். என நாம் கோருவதுடன். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமுகம் நடத்தும் போராட்டத்திற்கு நாம் முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related Posts