Ad Widget

போராட்டங்களை உதாசீனம் செய்தால்!விளைவுகளை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டிவரும்!

உரிமையைக் கேட்டு அமைதியான முறையில் போராடும் மக்களின் போராட்டங்களை உதாசீனம் செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனியின் தலைவருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தனது நல்லெண்ண அடிப்படையில் மக்களது போராட்டங்களை மதித்து அதற்கான தீர்வுகளைப் விரைவாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டு மென்றும் வலியுறுத்தினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமாதாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற இரணைதீவு மக்களை புதன் கிழமை சந்தித்துக் கலந்துரையாடியிரந்தார். இதன் போது அந்த மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் என்பனதொடர்பில் கேட்டறிந்துகொண்ட சுரேஸ் பிரேமச் சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இரணைதீவிலிருந்த இடம்பெயர்ந்து கடந்த பல வருடங்களாக இந்தமக்கள் பல கஷ்ட துன்பங்களுக்கு மத்தியில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த இடத்தை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களின் நியாயமாகபோராட்டத்தை நாங்களும் ஆதரிப்பதுடன் இதற்கான தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டு மென்றும் வலியுறுத்துகின்றோம்.

இந்தமக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தின் தொடராக இன்னும் சிலதினங்களில் பாதுகாப்பு இராஐாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இங்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு வருகைதர விருக்கின்ற அமைச்சர் வெறுமனே இங்கு வந்தார் சென்றார் என்றில்லாமல் இந்தமக்களுக்குடைய காணிகளை விடுவித்துக் கொடுக்க வேண்டும்.

இதே வேளை மக்கள் தமது நியாயமானதும் நிதியானதுமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே அவர்களது கோரிக்கைகளுக்கு அமைய கடற்படையினர் வசமிருக்கின்ற இந்தமக்களது காணிகளை விடுவித்து மீள்குடியேற்றம் செய்யவேண்டும்.

இதனைவிடுத்து அந்த மக்களின் போராட்டங்களை அரசாங்கம் உதாசீனம் செய்தால் அவர்கள் தமது போராட்ட வடிவங்களையும் மாற்றப் போவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். எனவே போராட்டங்களை அரசாங்கம் உதாசீனம் செய்வதால் ஏற்படுகின்ற விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டிவரும்.

எனவே இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆயினும் இவற்றை அரசாங்கம் செய்யாதுதொடர்ந்தும் காலம் தாழ்த்தி வந்தால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசை நீதியான, நேர்மையான, நியாயமான அரசு என்று எப்படிச் சொல்வதுஎன்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts