Ad Widget

போத்தல் குடிதண்ணீரில் கிறீஸ் : ஒன்பது நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு? ஒன்றின் அறிக்கை கிடைக்கவில்லையாம்!!!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை உள்ளமை கண்டறியப்பட்ட எட்டு நிறுவனங்களுக்கு எதிராக இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் மாதம் யாழ்.மாவட்டத்தில் விற்பனையாகும் குடிதண்ணீர்ப் போத்தல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் ஒன்பது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட குடிதண்ணீர்ப் போத்தல்கள் எழுந்தமானமாக சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை அனைத்தும் ஒரே தொகுதிக்குரியவை.

இவ்வாறு எடுக்கப்பட்ட குடிதண்ணீர்ப் போத்தல்களின் நீர் மாதிரிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவற்றில் இதுவரை எட்டு நிறு வனங்களின் குடிதண்ணீர்ப் போத்தல்களின் மாதிரிகளின் சோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.

அவற்றில் இரண்டு நிறுவனங்களது குடிதண்ணீரில் காரமும், மூன்று நிறுவனங்களது குடிதண்ணீரில் கீறிஸ் மற்றும் ஒயிலும், மூன்று நிறுவனங்களது குடிதண்ணீரில் காரம், கிறிஸ் மற்றும் ஒயிலும் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

எஞ்சிய ஓர் நிறுவனம் தொடர்பான அறிக்கை இன்னமும், அரச பகுப் பாய்வு திணைக்களத்திலிருந்து நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கவில்லை. இருந்தபோதும் முடிவுகள் கிடைத்த எட்டு நிறு வனங்களுக்கு எதிராக இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த எட்டு நிறுவனங்களின் பெயர்களை வெளி யிடுவதற்கான அனுமதி தமக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றும் நுகர்வோர் அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts