Ad Widget

போதை பொருள் கடத்தலின் பிரதான மார்க்கம் காங்கேசன்துறை!

வடமாகாணத்தில் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக காங்கேசன்துறை பகுதியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புக்களை மேற்கொண்ட பொலிஸாருக்கும் அதிகளவான குற்றங்களை கட்டுபடுத்த உதவிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பரிசளிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்படி இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

“வடமாகாணத்தில் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக காங்கேசன்துறை பகுதியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இப்பகுதியில் திறமையாக கடமையாற்றுகின்ற பொலிஸார் இக் கடத்தல் முயற்சிகளை பெரும்பாலும் முறியடித்து விடுகின்றார்கள்.

அதிகளவான போதை கடத்தல்களை முறியடித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சன்மானமும் கௌரவமும் எனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இவர்கள் போன்று செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை தூண்டுவதாக அமைய வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts