Ad Widget

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் கூட்டமைப்பின் தலைவர்களைத் தடுக்க என்ன வழி – ஈ.பி.டி.பி. கேள்வி!

வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பதானது வரவேற்கத்தக்கது. அதேநேரம், போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கது.

அத்துடன், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள கூட்டமைப்பின் சில தலைவர்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் நடவடிக்கை எடுக்க முன்வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

யுத்தம் நிலவிய காலந்தொட்டு போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கில் மன்னாரைக் கேந்திரமாகக் கொண்டே இந்த சமூக விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இப்பகுதி ஊடாக இவை தென் பகுதிகளுக்கு கடத்தப்பட்டன. தற்போது, வடக்கில், குறிப்பாக யாழ். குடாநாட்டுப் பகுதிகளில் பாரியளவில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.

இந்த பின்னணியிலேயே யாழ். குடாநாட்டில் தற்போது போதைப் பொருட்கள் பரவலாக கடத்தப்பட்டும், விற்பனை செய்யப்பட்டும் வரும் நிலையில் அதன் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், தமது தலைவர்கள் போதைப் பொருள் கடத்தல், விற்பனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அடுத்துவரும் பொதுத் தேர்தலில் இவ்வாறான சமூக விரோதிகளுக்கு வேட்புமனு வழங்காதிருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என ஈ. பி. டி. பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts