Ad Widget

போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்களை சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள் யாழ். பிராந்தியப் பணிப்பாளர் தெரிவிப்பு

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்களை கடுமையாக தண்டிக்காது சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவர்கள் மாணவர்களை சரியான முறையில் கையாள்வார்கள் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.தேவநேசன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் எதிர்ப்பு மாதத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனையை எமது சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அந்த வகையில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றனர்.

அத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்துவதற்காக மருத்துவ உதவிகளையும் சிகிச்சைகளையும் உளநல வைத்தியர்கள் ஊடாக மேற்கொண்டு வருகின்றோம்.

போதைப் பொருள் கடத்த லில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனியான சோதனைச் சாவடிகளை அமைத்து அவர்களை கைது செய்யவோ கண்டுபிடிக்கவோ முடியாது. அவர்கள் வேறு வழிமுறை களைப் பின்பற்றி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகமாக போதைப் பொருள் கடல் வழி பாதையூடாக கடத்தப்படுகின்றன. குறிப்பாக பருத்தித்துறை- மாதகல் பகுதியூடாக கடத்தப்படுகின்றன. கடல்பரப்புக்களில் சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டால் நிச்சயமாக போதைப் பொருள் கடத்தலைக் குறைக்க முடியும்.

யாழ்.மாவட்டத்திலுள்ள மதுபானசாலைகளில் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வடமாகாண ஆளுநரால் கொடுக்கப்பட்ட பணிப்பின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம் எமது சமூகத்தை போதைப் பொருள் பாவனையிலிருந்து காப்பாற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts