Ad Widget

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்களில் வட மாகாணத்திற்கு முன்னுரிமை!- ஜனாதிபதி

ஒரு வருடத்தில் இலங்கையில் ஐயாயிரம் சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த நிலைமைகள் குறித்து உடனடியாக தமக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஜேர்மனி உள்ளிட்ட சிறுநீரக நோய் தவிர்ப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளிடம் உடனடியாக சமர்ப்பித்து அந்நாடுகளின் உதவியுடன் குறித்த கருத்திட்டத்தை கூடிய விரைவில் நாட்டில் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய குருதி மாற்றுகை மத்திய நிலையத்தின் கேட்போர்கூடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களினதும் பங்குபற்றுகையுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பத்து வருட தேசிய சுகாதாரத் திட்டம் தொடர்பான வரைவும் இதன்போது முன் வைக்கப்பட்டதோடு, பொது மக்களினதும் சுகாதாரத்துறையின் எல்லா பிரிவுகளினதும் கருத்துக்களைப் பெற்று அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இன்று மக்களின் உணவில் நச்சு இரசாயனப் பொருட்கள் சேர்வதே அநேகமான நோய்களுக்கு பிரதான காரணமாக உள்ளதோடு, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சுவையூட்டிகளான MSG சுவையூட்டியை தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் சீனியின் அளவை குறைப்பதற்கும் அரசாங்கம் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு, சிற்றுண்டிச்சாலைகளில் தேநீர் கோப்பையில் சீனியைச் சேர்க்காது தேவையான அளவில் பயன்படுத்திக்கொள்வதற்கு ஒரு சீனி பக்கற் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததோடு, அதன் தற்போதைய நிலை குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.

எயிட்ஸ் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, தற்போது வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களில் வட மாகாணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மருந்து உற்பத்தி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. டெங்கு நோய் பரவுவது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, பூச்சியியல் வல்லுனர் (நவெழஅழடழபளைவ) உதவியாளர்கள் ஆயிரம் பேர் கொண்ட நிரந்தர படையணி ஒன்றை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அதனை துரிதப்படுத்த உதவுமாறும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

மந்த போசணை நிலைமை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையில் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் மந்த போசணை நிலைமை தற்போது நூற்றுக்கு 21 வீதம் என்ற நிலைமையில் இருந்து நூற்றுக்கு 15.5 அளவுக்கு குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. எனினும், தற்போது பாடசாலை பிள்ளைகள் மத்தியில் மட்டுமீறிய உடற்பருமன் அதிகரித்து வருவதாகவும் பிழையான உணவு பழக்கங்களே இதற்கு காரணமாகும் என்றும் தெரியவந்துள்ளது.

Related Posts