Ad Widget

போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை அலகு இன்று திறந்து வைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

hospitla-new

இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவிக்கையில்,

வரலாற்றில் முதல்முறையாக இன்று போதனா வைத்தியசாலையில் விலங்கு விசர் நோய் தொடர்பான அலகு ஒன்று இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் 24ஆம் விடுதிக்கு சென்று அதிக நேரம் செலவழித்து சிகிச்சை பெறவேண்டி இருந்ததது. எனவே நோயாளர்களது நன்மை கருதி வெளிநோயாளர் பிரிவிலேயே சிகிச்சை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

நாய்களை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு விசர் நாய் கடிக்கு உள்ளாகியவர்கள் 100 வீதம் மரணத்தை தழுவியே ஆகவேண்டும். எனவே மரணத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அதனடிப்படையில் இந்த அலகினை திறந்து வைத்துள்ளோம்.

எனினும் நாய் கடிக்கு உள்ளாகி நாள் ஒன்றுக்கு 40 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். அதற்கமைய தனியான மருத்துவர் மற்றும் தாதிகளையும் நியமித்து புதிய அலகை உருவாக்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சைப் பிரிவுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவில் 5 மாடிக் கட்டிடம் அமைக்கும் பணிகள் 2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் உலக வங்கியின் நிதியுதவியில் இலங்கையிலுள்ள 16 வைத்தியசாலைகளில் கட்டிடங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்தக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி திட்டத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான அனுமதியுள்ள நிலையில், சுகாதார அமைச்சின் மேலதிக நிதியைக் கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 5 மாடிக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த 5 மாடிக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts