Ad Widget

போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் குடாக் கடலில் கொட்டப்படுவதை உறுதி செய்தார் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார்.

யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர முதல்வர் இ.ஆர்னொல்ட் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

‘யாழ் போதனா வைத்தியசாலையின் உயிரியல் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் உயிரியல் கழிவுகளை சுத்தம் செய்யாமல் நேரடியாக கடலுக்குள் கொட்டுகிறது. இது மிக ஆபத்தானது. கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், கடற்றொழிலாளர்களும் ஆபத்தை எதிர்கொள்வார்கள்.

கழிவகற்றலிற்காக இந்த நிறுவனத்திற்கு போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெருந்தொகை பணம் வழங்குகிறது. ஆனால் நிறுவனம் தனது பணியை சரியாக செய்யாமல், யாழ் சிறைச்சாலைக்கு அருகான பகுதி ஊடாக கழிவுகளை கடலுக்குள் கொட்டுகின்றது’ என்று சபையில் எடுத்துக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் உண்மையானது என யாழ் மாநகரசபை ஆணையாளரும் குறிப்பிட்டார். எனினும், இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் சட்டவலு இல்லாததால் தலையிட முடியாதுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் குடாக்கடலில் கலக்க விடுதல் தொடர்பாக மாநகர சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

வைத்தியசாலையிலிருந்து, யாழ். பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பரிசோதிப்பதற்காக நேரடியாக ஆராயுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் நேற்று காலை குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு நேரில் சென்றிருந்தார்.

அந்த இடத்துக்குச் சென்ற போது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியதோடு, விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Related Posts