Ad Widget

போட்டி அரசியலினால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு: கஜதீபன்

p-kajatheepanபோட்டி அரசியல் காரணங்களுக்காக மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்போர் மத்தியிலேயே வடமாகாண சபையை நடத்த வேண்டியுள்ளது’ என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.

கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாதாந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வும், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வுகள் என்பன கோண்டாவிலில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

‘மக்கள் நலன் பேணும் அமைப்பினரையும் அதன் அங்கத்தவர்களையும் நான் நன்கு அறிவேன். அவர்கள் வெறுமனே இவ்வாறான உதவி வழங்கல்களை மட்டும் செய்பவர்கள் அல்ல. அதையும் தாண்டி தமிழ்த்தேசியத்தின் பால் மாறாத பற்றையும், தீவிர விசுவாசத்தையும் தொடர்ந்து பேணி வருபவர்கள்.

இன்று எமது மக்கள் போரினால் எல்லாவற்றையும் இழந்து வாழ்ந்துவரும் வேளையில் மக்கள் நலன்பேணும் அமைப்பினரின் இம்முன்மாதிரியான செயற்பாடுகள் மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும்.

அண்மையில் மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட முதலமைச்சர் நிதி, நியதிச் சட்டத்துக்குக்கூட ஆளுநர் தனது எதிர்ப்பினைத் தெரிவித்தார்.

ஆளுநர் எதிர்த்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காகவே எவ்வித காரணமுமின்றி எதிரணி உறுப்பினர்களும் எதிர்த்தார்கள்.

அவற்றையெல்லாம் மீறி, அவர்களின் முட்டுக்கட்டைகளையெல்லாம் கடந்துதான் நாம், அந்த சட்ட மூலத்தை சபையில் நிறைவேற்ற வேண்டியிருந்தது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts