Ad Widget

போசாக்கின்மை தொடர்பில் 5 பிரதேச செயலர் பிரிவுகள் தெரிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில், போசாக்கின்மை உள்ள பிரதேசங்களாக 5 பிரதேச செயலர் பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மாவட்டம் முழுவதும் போசாக்கின்மையை ஒழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போசாக்கு தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலர் தலைமையில், வியாழக்கிழமை (16) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே, மாவட்டச் செயலர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஐனாதிபதியின் வழிகாட்டலில் ஐனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் போசாக்கின்மையை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ் மாவட்டத்திலும் போசாக்கின்மையை ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அது தொடர்பிலே, பல்வேறு தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் போசாக்கு தேவையுடைய பிரதேச செயலகங்களாக 5 பிரதேச செயலகங்கள் மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய மாவட்டத்தின் காரைநகர், வேலனை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை, சங்கானை ஆகிய பிரதேச மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில், போசாக்கு குறைபாடு அடையாளாம் கண்டு நீண்ட நோக்கில் போசாக்கின்மையை குறைப்பதுதான் இத் திட்டத்தின் நோக்கமாகும். இதற்மைய போசாக்குத் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை திரட்டப்பட்டு வருகின்றது .இவ்வாறு அடையாளம் காணுபவர்களின் விபரங்கள் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இவ்வாறு போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கேற்ப, முழுமையான உதவிகள் வழங்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகளும் பலவழிகளிலும் மேற்கொள்ளப்படும்.

அதாவது, போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்கு பல உதவிகளையும் அமைச்சுக்களினூடாக வழங்க இருக்கின்றோம்.

இதேவேளை, கடந்த காலங்களில் முன்பள்ளிகளுக்கு பால் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், இந்த வருடத்துடன் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுபோசாக்குத் தேவையுடைய பகுதிகளாக இருக்கின்ற மேற்படி ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் பால் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts