Ad Widget

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளில் யாழ். மேல் நீதிமன்றம் தலையிடாது! – நீதிபதி இளஞ்செழியன்

யாழ். குடாநாட்டின் நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போக்குவரத்துக் குற்றங்கள் சம்பந்தமாக – விசேடமாக மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்துமாறு யாழ். நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்குகின்றன. இத்தகைய தீர்ப்புக்களை மீளாய்வு செய்து சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துமாறு நீதிவான் நீதிமன்றங்களால் விடுக்கப்பட்ட கட்டளையை ரத்துச் செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

யாழ். குடாநாட்டின் நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய போது இடம்பெற்ற வாகனப் போக்குவரத்து விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தில் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக அவருடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை நீதவான் நீதிமன்றம் 9 மாதங்களுக்குச் செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிட்டது.

இதேபோன்று இன்னுமொரு வழக்கிலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்க நீதிமன்றம் பணித்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை ஆட்சேபித்து யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுக்களில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இவற்றில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணை கடந்த வெள்ளியன்று மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது, வாகனப் போக்குவரத்து குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிவான் நீதிமன்றங்கள் பிறப்பிக்கின்ற கட்டளைகளில் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என்று நீதிபதி இளங்செழியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நீதிவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் தாமாகவே முன்வந்து குற்றவாளிகள் என ஒப்புக் கொண்டனர். இதன் பின்னர் சட்ட வரையறைக்கு உட்பட்டே தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன. எனவே, இத்தகைய வழக்குகள் தொடர்பில் மீளாய்வு மனு தாக்கல் செய்யும்போது, அந்தத் தீர்ப்பில் சட்டரீதியாக என்ன பிழை இருக்கின்றது என்பது மீளாய்வு மனுவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட வேண்டும். நீதிவான் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மேல் நீதிமன்றம் தலையீடு செய்வதற்கு விதி விலக்கான காரணங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதும் அந்த மீளாய்வு மனுவில் முறையாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை மீளாய்வு செய்வதற்குரிய சட்ட ரீதியான காரணங்கள் அல்லது விளக்கங்கள் மீளாய்வு மனுக்களில் குறிப்பிடப்படாத சூழ்நிலையில் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களுக்கு தற்காலிகமாகக்கூட மேல் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்படமாட்டாது.

ஆகவே, இந்த மீளாய்வு மனு மீதான மேல் நீதிமன்ற விசாரணைகள் முடிவடையும் வரையில் நீதவான் நீதிமன்றத்தின் தடையுத்தரவு நீடிக்கும் என்றார். இந்த வழக்கு தொடர்பாக அரச சட்டத்தரணி தனது ஆட்சேபணை மனு தாக்கல் செய்வதற்கு பங்குனி மாதம் வரையில் அவகாசம் வழங்கி நீதிபதி இளஞ்செழியன் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Related Posts