Ad Widget

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் மாஅதிபர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்தில் தற்சமயம் தலைவிரித்து ஆடும் சட்ட ஒழுங்கு சீரற்ற கொலை, கொள்ளை நடவடிக்கைகளை நேரடியாக தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முகமாக யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மாஅதிபர் பூசித ஜயசுந்தர அனுப்பிவைக்கப்படுவார் என சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

கொழும்பில் வாழும் யாழ்குடாவை சேர்ந்த சமூக முன்னோடிகள் என்னை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் நான் இன்று யாழ்ப்பாணத்தில் நிலவுவதாக கூறப்படும் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலைமையையும், அவை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறலாம் என்ற அவர்களின் சந்தேகத்தையும் எனது கணக்கில் எடுத்துள்ளேன்.

இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் அமைச்சரவை சந்திப்பின் போது கலந்துரையாடி உள்ளேன்.

அதேவேளை சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருடனும் உரையாடியுள்ளேன். இந்நிலையில் தற்போது உலக காவல்துறை மாநாட்டுக்கு சென்றுள்ள பொலிஸ் மாதிபர் இவ்வார இறுதியில் நாடு திரும்பியதும், அவர் யாழ்ப்பாணம் சென்று மூன்று தினங்கள் அங்கு தங்கி இருந்து அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை கண்காணிப்பு நடவடிக்கைகளை நேரடியாக வழி நடத்துவார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்து பொலிஸ் இயந்திரம் பழுது பார்க்கப்பட வேண்டும் என அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் நான் கூறியுள்ளேன். சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீரவும், பொலிஸ் மாதிபருடன் வடக்குக்கு செல்லவேண்டும் என்ற என் யோசனையும் நடைமுறையாகும். வடக்கே சென்று அங்கு மக்கள் பிரதிநிதிகளையும், சமூக தலைவர்களையும், வடக்குக்கு பொறுப்பான முழு பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருசேர சந்தித்து இன்று அங்கு தலைவிரித்தாடும், கொலை, கொள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அமைச்சர் சாகல ரத்நாயக உறுதியளித்துள்ளார்.

Related Posts