Ad Widget

பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் மகஜர்!

அக்கராயன் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி வட.மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரியே பிரதேச மக்களால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் பிரதேசத்தில் இருந்து சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொது மக்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள வட.மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஆட்சேபனை மகஜரை கையளித்துள்ளனர்.

இதன்போது அக்கராயன்குளம் பிரதேசத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், என ஏழு மக்கள் அமைப்புகளே குறித்த மகஜரைக் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில், அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்க கடமையினை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் இந்த பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, களவு போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வருகின்றார். அவர் தொடர்ந்தும் இந்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியாக இன்னும் சில வருடங்களுக்கு பணியாற்ற வேண்டும்.

இதனால் மேற்குறிப்பிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை பெருமளவுக்கு கட்டுப்படுத்தி அமைதியான பிரதேசமாக அக்கராயன் பிரதேசத்தை மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுண்டு. எனவே பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் அவருக்கு வழங்கும் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமென குறித்த மகஜர் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts