Ad Widget

பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் இராணுவத்திடம்: மக்கள் அச்சம் – டக்ளஸ்

பொலிஸாருக்குரிய அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கியிருப்பதன் காரணத்தால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சமும் அதேநேரம் சந்தேகமும் எழுந்துள்ளது, எனவே இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

KN-daklas

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வில் இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு நாம் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

புதிய அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்திருப்பதையிட்டு வரவேற்கின்றோம். எனினும் எரிபொருள் விலையானது கொழும்பில் ஒரு விலையிலும் வடக்கில் மற்றொரு விலையிலும் விநியோகிக்கப்படுகின்றது.

எனவே இவ்விடயத்தில் நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் எரிபொருள் விலை குறைப்பானது நாட்டின் அனைத்து மக்களும் அனுபவிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

இதேவேளை இரட்டைக் குடியுரிமையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விளைந்திருப்பது தொடர்பில் நாம் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலைமாறி தற்பொழுது 7ஆக குறைந்துள்ளது. அங்கிருந்த மக்கள் புலம்பெயர்ந்ததன் காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே புலம்பெயர் சமூகத்தினருக்கும் வாக்குரிமை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அத்துடன் புலம்பெயர்ந்தோர் இங்கு வாக்களிப்பதை சட்டரீதியில் ஏற்படுத்துவதற்கு வகை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் வடக்கில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள நிலங்களை மீட்டு மீண்டும் மக்களிடத்தில் கொடுப்பதற்கும் அரசியல் கைதிகளாக இருப்போரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்ற அதேவேளை எமது கடல் வளம் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு செயற்படுமாறு புதிய அரசாங்கத்தை கேட்கின்றோம்.

இதேவேளை பொலிஸாருக்கு உரிய அதிகாரத்தை இராணுவத்துக்கும் வழங்கியிருப்பதன் காரணத்தால் தமிழ் மக்களிடத்தில் பாரிய அச்சமும் சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

Related Posts