நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்காகவே இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு அவருடைய பாதுகாவலர்கள் இருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்தார். ஆனால் பொலிஸார் அவசர அவசரமாக துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதி அல்ல என கூறுவது பலத்த சந்தேகங்களை உருவாக்கியிருக்கின்றது என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார்.
நீதிபதி இளஞ்செழியன் மீது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிஸார் அவசர அவசரமாக அந்த இடத்தில் சண்டை ஒன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்தே நீதிபதியின் பாதுகாவலருடைய துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் அவசர அவசரமாக கூறினார்கள்.
பொலிஸார் எதற்காக இவ்வளவு அவசரத்தை காட்டுகின்றார்கள் என்பது எமக்கு தெரியவில்லை என்பதுடன் பலத்த சந்தேகங்களையும் உருவாக்கியிருக்கின்றது. இதேபோல் 2004ம் ஆண்டு நீதிபதி அம்பேத்பிட்டிய படுகொலை செய்யப்பட்டபோது புலிகளே படுகொலை செய்தார்கள் என கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை பாதாள உலக குழுக்களே செய்திருந்தமை அம்பலத்திற்கு வந்தது.
அந்தவகையில் எதனையும் ஆராய்ந்து தீர்க்கமான முடிவுக்கு வந்த பின்னதாகவே கூற வேண்டும். மேலும் சட்டவிரோத ஆயுத குழுக்கள் அல்லது அரசாங்கத்தில் உள்ள சிலர் இவ்வாறான சம்பவத்தை கூலிப்படையை அமர்த்தி செய்திருக்கலாம். இதேபோல் வித்தியா படுகொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் ட்ரயல் அட் பார் முறையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவராக உள்ள முன்னாள் சிரேஷ்டி பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆதரவாக வழக்கை நடத்துவதற்கு பல பொலிஸ் நிலையங்களில் நிதி திரட்டப்படுவதாக அறிகிறோம். எனவே இவ்வாறு பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான துப்பாக்கி பிரயோகம் பலத்த சந்தேகங்களை எமக்கு உருவாக்கியிருக்கின்றது.
ஒருவேளை நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்கு இந்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம். எனவே முழுமையான விசாரணைகளை நடத்தாமல் பொலிஸார் அவசரப்படுவது எதற்காக?
ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் நீதித் துறையின் சுதந்திரத்தை இந்த சம்பவம் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது. எனவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.