Ad Widget

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக்வும் – தவராசா

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர்.

அதில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் மகன். கைதுசெய்யபட்ட அவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டனர்.

அங்கு வைத்து அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் எனக் கேட்டதற்கு ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியிருந்தனர்.

அவர்களை முன்னின்று கைது செய்து மூர்க்கத்தனமாக தாக்கியவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து பிரதிப் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டதன் பின்னரே அவர்கள் இரவு 8.00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரினால் அவ்விளைஞர்களின் மனித உரிமை முற்றாக மீறப்பட்டுள்ளது என்பதை யாழ் கச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் காரசாரமாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தாம் நடவடிக்கை எடுப்பார் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்ததுடன், அது தொடர்பான முறைப்பாட்டை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் மேற்கொள்ளுமாறு வேண்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவ்விளைஞர்களிடம் தாம் செய்தது தவறு என்றும் தங்களை மன்னிக்கும்படியும் இனிமேல் இவ்வாறு தவறு இழைக்க மாட்டோம் என்றும், தங்கள் மீது முறைப்பாடு செய்யப்படின் வேலையை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் தங்கள் மீது கருணை காட்டும் படியும் வேண்டியதன் அடிப்படையில் அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுப்பதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

இருந்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எனக்கு அறியத் தந்துள்ளனர்.

இவ்வாறாக பொலிஸாரினால் மனித உரிமைகள் எதிர்காலங்களில் மீறப்பட்டால் அது தொடர்பாக தனக்கு உடன் அறிவிக்கும் வண்ணம் எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts