Ad Widget

பொலிஸாரிடமிருந்து மின்சார, நீர் கட்டணங்கள் அறவிடப்படாது – பொலிஸ் தலைமையகம்

திருமணம் முடிக்காத பொலிஸார் தங்குகின்ற விடுதிகளுக்காக இதுவரை காலமும் அறவிடப்பட்ட நீர் மற்றும் மின்சாரம் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இனிமேல் அவர்களிடமிருந்து அறவிடப்படமாட்டாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருமணம் முடிக்காமல் பொலிஸ் சேவையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகளிடமிருந்து அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கான மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் அவர்களிடமிருந்து விகிதாசார முறையில் இதுவரை காலமும் அறவிடப்பட்டுவந்தது.

அதாவது, மொத்தக்கட்டணம் விடுதிகளில் தங்கியிருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையில் வகுக்கப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும்.

எனினும், இவ்வாறு அறவிடப்படும் கட்டணம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அறவிடாமல் விடுவதற்கு திறைச்சேரி தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், தனியாக வாழ்கின்ற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் பொலிஸாரிடமிருந்து அவர்களின் சம்பளத்தில் மேற்குறிப்பிட்ட இவ்விரு கட்டணங்களும் இனிமேல் அறவிடப்படாது.

Related Posts